இந்து கோயிலில் வழிபடக் கூடிய முதல் தெய்வம் விநாயகர் இருப்பதைப் போல, பெருமாள் கோயிலில் நுழைந்ததும் வழிபட வேண்டியவர் கருடாழ்வார். கருடருக்கு ஏன் இவ்வளவு பெரிய புகழ் வந்தது. கருடருக்கு பின்னால் உள்ள புராண கதை, கருட விரதமும், கருடன் கொடுக்கும் பலன்கள் என்ன என்பதை விரிவாக பார்ப்போம்.
கருடனின் பிறப்பு
காசியபர் மகரிஷி - வினதை தம்பதிக்குப் பிறந்தவர் தான் பறவைகளின் தலைவன் கருடன்.
சூரியனின் தேரை ஓட்டக் கூடிய அருணன் இவரின் தம்பி.
இதே காசிபர் மகரிஷிக்கும் - கத்ரு தம்பதிக்கும் பிறந்தவர்கள் தான் நாகர்கள். கருடனின் எதிரிகள்.
திருமாலின் வாகனமாக இருக்கும் கருடன் என்பதற்கு சமஸ்கிருதத்தில் சுமையை சுமப்பவன் என்பது பொருள்.
வைணவ புராணங்களில் மகாவிஷ்ணுவின் பெரிய திருவடியாகப் போற்றப்படுபவர் கருடாழ்வார். இவர் திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்.
இந்து மதம் பல தெய்வங்களை உள்ளடக்கியதோடு ஒவ்வொருவருக்குமான பல புராண கதைகள் உள்ளடக்கியுள்ளன. அந்த வகையில் எந்த ஒரு கோயிலுக்கு சென்றாலும் முதலில் வழிபட வேண்டிய தெய்வமாக முழுமுதல் கடவுள் விநாயகப் பெருமான் உள்ளார்.
கருட பஞ்சமி, நாக பஞ்சமி 2019 - சந்ததி பலம் தரும் நாக பஞ்சமி வழிபாடு!
விநாயகரை வழிபட்ட பின்னரே மற்ற தெய்வங்களை வழிபட வேண்டும் என்ற விதி இந்துமதத்தில் உள்ளது. அது ஒருபுறமிருக்கட்டும். பெருமாள் கோயிலுக்கு செல்பவர்கள் விநாயகரை வழிபட்ட பின்னர், பெருமாளை வழிபடுவதற்கு முன் வணங்க வேண்டிய தெய்வம் தான் கருடாழ்வார்.
பொதுவாக பெருமாள் திருத்தலங்களுக்குச் செல்பவர்கள் நேராக பெருமாளையும், அனுமனையும், சக்கரத்தாழ்வாரையும் வழிபட்டு வருவது வாடிக்கையாக வைத்துள்ளனர். ஆனால் வைணவ ஆகம விதிப்படி கருடரை வழிபட்ட பின்னர் தான் பெருமாளை வழிபட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
பெருமாள் கோயில் மட்டுமல்லாமல், மற்ற கோயில்களில் கும்பாபிஷேகத்தின் போது வந்து கருடன் வட்டமிட்டால் தான் அந்த கும்பாபிஷேகம் முழுமை அடைந்ததாக, முடிந்ததாக அர்த்தம்.